“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தளைக்குமாம்” என்னும் பாரதியார் கூற்றுக்கிணங்க, மேரி கியூரி அம்மையார் அவர்கள் அறிவியல் துறையில் வல்லுனராகி புகழ்பெற்று விளங்கினார். பெண் என்பதனால் தாய்நாட்டில் படிப்பதற்கு தடை ஏற்பட, வெளிநாட்டு பெண் என்பதினால் படிக்கச் சென்று நாட்டில் எதிர்ப்பு ஏற்பட, பெண் என்பதனால் பாராட்டுக்கள், பரிசுகள் கூட கிடைப்பதில் போராட்டங்கள் ஏற்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளீர்களா அவர்தான் இந்த மேடம் மேரி கியூரி அம்மையார்.
போலந்து நாட்டின் தலைநகரில் வாழ்ந்த ஒரு உழவர் குடும்பத்தின் வாரிசான கியூரி அம்மையாரின் இயற்பெயர் மேரியா. இயற்கையிலேயே புத்திக்கூர்மை உடைய இவர் படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
1861 போலந்து நாட்டில் பிறந்த இவரின் தந்தையார் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர். தாயாரும் உள்ளூர் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தான். ஆனால் மேரியாவின் சிறு வயதிலேயே, தாயார் கச நோய் காரணமாக இறந்துவிட்டார். உள்ளூர் பள்ளியில் திறம்பட கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மேரியா, 1883 தங்கப் பதக்கத்தோடு வெளியேறினார். பெண் என்ற காரணத்தால் மேல் படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தந்தையாரின் உதவியுடன் 1891 வரை கல்வியை தொடர்ந்த இவர், ரஷ்ய வேதியலாளரான மேரியாவின் உறவினர் ஒருவரின் தொழிற்சாலையில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடத்தில் அறிவியல் பயிற்சியை தொடங்கினார். 1891 முடிவில் பிரான்சிக்குச் சென்ற மேரியா, அங்கு இருந்த பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியல், கணிதம் பயின்றார். மிக சொற்ப பணத்தில், மிகுந்த சிரமத்தில் படிப்பைத் தொடர்ந்த மேரி, 1893இல் இயற்பியலில் பட்டம் பெற்றார். ஆய்வு கூடத்தில் வேலை பார்த்தபடி படிப்பை தொடர்ந்த மேரி, தனது இரண்டாவது பட்டத்தை 1894 இல் பெற்றார்.
தனது ஆய்வுகளை பாரிசில் தொடங்கிய மேரி, முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த வேளையில் பியரிகியூரி என்பவரை சந்தித்தார். இருவரிடமும் இருந்த அறிவியல் ஆர்வம் இருவரையும் ஒன்று சேர்த்தது. மேரி பியூரி இருவரும் திருமணபந்தத்தில் இணைந்தனர். 1895இல் ஒரு மகள் பிறந்தாள். கியூரி தம்பதிகள் ஆய்வுகளை ஆராயும் ஆய்வு கூடம் நல்ல காற்றோட்டமோ, நீர் புகா அமைப்போ கொண்டிருக்கவில்லை. அவர்கள் கதிரியக்கத்தை கையாளுவதால் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவில்லை. 1898 இல் யுரேனியத்தை அடுத்து தோரியம் என்னும் தனிமமும், கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்.
1898 இல் கியூரி தம்பதிகள் புதிதாகக் கண்டுபிடித்த புதிய தனிமத்தை தனது தாய் நாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பொலோனியம் என பெயரிட்டனர். மேலும் ரேடிய ஆக்டிவிட்டி (Radioactivity ) என்னும் சொல்லை கதிரியக்கத்திற்கு பெயரிட்டனர். 1903 இல் ராயல் சுவீடிஸ் அகாடமி, மேரி மற்றும் கியூரி ஆகிய இருவருக்கும் இயற்பியலில் நோபல் பரிசு அளித்தது. இந்த மகிழ்ச்சியில் 1904 இல் இரண்டாவது பிள்ளையும் பிறக்கின்றது. ஆனால் இரண்டே வருடத்தில் கணவர் பியரி 1906இல் ஒரு சாலை விபத்தில் இறக்க, அவரின் பல்கலைக்கழக பேராசிரியர் பதவி மேரி அம்மையாருக்கு வருகின்றது. முதல் பெண் பேராசிரியர் ஆனார் மேரி அம்மையார்.
1910இல் மேரி ரேடியத்தை பிரிப்பதில் சாதிக்க, உலகின் முதலாவது இரட்டை நோபல் பரிசை பெற்ற நபராக, 1911 ல் ராயல் சுவீடிஷ் அகடமி ஆப் சயின்ஸ் மேரிக்கு இரண்டாம் நோபல் பரிசை வேதியலில் வழங்கியது. பிரஞ்சு அகாடமி ஆப் சயின்ஸ் தேர்தல்களில் மேரி ஒரு அயல் நாட்டுக்காரர் என்றும் அவர் ஒரு நாத்திகர் என்றும் ஒதுக்கினர். ஆனால் நோபல் பரிசு பெற்ற பின் போற்றினர். தாய்நாடு, பெண் என்ற காரணத்தால் மேற்படிப்புக்கு தடை விதித்தது. அதே தாய் நாட்டை தன் கண்டுபிடிப்பில் பெயரிட்டு பெருமைப்படுத்தினார்.
1914 இல் முதலாம் உலகப் போரின் போது, ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளை பொருத்த உதவி செய்தார். முதலாம் உலகப் போரின் போது காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவிக்கு எக்ஸ்ரே கருவிகளில் பயன்பாடு, ரேடியாலயி சேவை என இவரின் சேவைகள் விரிந்தது.
மேரி கியூரி அம்மையார் தொடர்ந்து கதிரியக்க வெளிப்பாட்டோடு, ஒழுங்கான உபகரணங்கள் இன்றி தொழிற்பட்டதால், நோயினால்ப் பாதிக்கப்பட்டு, இரத்த சோகை நோயினால் 1934இல் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவரின் கண்டுபிடிப்புகள் இன்றும் அவரை நிராகரித்த இந்த உலகில் அவரை நிலைநாட்டி நிற்கின்றது.